நான் ஒருமுறை கர்த்தரை விசுவாசிக்கிற ஒரு சகோதரியிடம் கிறிஸ்துவை குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர்கள் என்னிடம், "ஐயா, எனக்கு ஒரு மனக்குறை உண்டு" எனக்கு மட்டுமல்ல, எங்கள் பெண்கள் சங்கத்தில் பல பெண்களிடமும் இந்த மனக்குறை உண்டு என்றார். நான், "அது என்ன? என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் சொன்னது, "ஐயா, இயேசு கிறிஸ்து ஒரு பெண்ணாக பிறவாமல், ஏன் ஒரு ஆண் மகனாக பிறந்தார். அவர் ஆண் மகனாக பிறந்ததினால் ஆண் குலத்துக்குத்தானே பெருமை ஏற்பட்டது. அவர் ஒரு பெண்ணாக பிறந்திருக்க அவரால் முடியுமே!" என்று கூறினார். உடனே நான் சொன்னேன். "சகோதரி, இது பிதாவாகிய தேவனுடைய சித்தம். ஆகையால் தான் அவர் ஆணாக பிறந்தார் என்றேன் (ஏசா. 9:6) அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் நான் சொன்ன பதில் எனக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை. இதை எனக்குள்ளே வைத்து பல மாதங்கள் தியானம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஆதியாகமம் 1 ஆம் 2 ஆம் அதிகாரங்களை வாசித்து கொண்டிருக்கும்போது இயேசுவானவர் எனக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்.
ஆதி.1:26, 27யின் படியும், யோ. 1:3யின்படியேயும் தேவனாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய சாயலின்படியேயும் ரூபத்தின்படியேயும் மனிதனை சிருஷ்டித்தார். இவ்வசனங்களின்படி ஆதியிலே பிதாவோடு இருந்த யகோவா என்கிற இயேசு கிறிஸ்துவானவர் சாயலும் ரூபமும் உடையவர் என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். குமாரனாகிய தேவன் சாயலும் ரூபமும் உடையவரானால் (கொலே. 1: 15) அவருடைய பிதாவும் அதே சாயலையும் ரூபத்தையும் உடையவர் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டேன் (வெளி.அதி.4). அந்த யலின்படியேயும் ரூபத்தின்படியேயும் ஆதாமாகிய மனிதனை (அல்லது) ஆதாம் என்கிற ஆண் மகனை மண்ணிலிருந்து உண்டாக்கினார் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆகவே பிதாவும் குமாரனும் ஆண் ரூபத்தை உடையவர்களே. பெண்ணோ (அல்லது) ஏவாளோ ஆதாமுக்கு ஏற்றவளாக ஆதாமிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டாள். இயேசு கிறிஸ்துவின் உண்மையான ரூபம் (அல்லது) தோற்றம் (அல்லது) உருவம் ஆணாக இருக்கின்ற காரணத்தால், அவர் இந்த உலகத்தில் பிறந்தபோதும் ஆணாக பிறந்தார், உண்மையான ஆண் உருவம் இயேசு கிறிஸ்துவின் உடையதே. ஆதாமோ அவர் சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் ஆகவேதான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரே மெய்யான மனிதனும் (மனுஷகுமாரன்) ஒரே மெய்யான தேவனுமாயிருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. எனவே பிதாவையும் அவருடைய ஒன்றான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் ஆணாக தெரிந்து (அல்லது) அறிந்து கொள்வது அவசியம். அவர் ஆணாக இருந்தாலும் அவருக்குள் நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறோம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பவுலின் வழியாக கூறுகிறார். அதாவது, 'கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் பெண் என்றும் இல்லை. அடிமை யென்றும் சுயாதீனன் என்றும் இல்லை, கிரேக்கன் என்றும் இல்லை, எபிரெயன் என்றும் இல்லை. அவருக்குள் நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறோம்' என்று பவுல் எழுதுகிறார்.(கொலே. 3:11. கலா. 3:28).