ஆவிக்குரிய பிரகாரமாய் அவரை அறிந்து கொள்வது

பவுல் தான் எழுதின நிருபத்தில் 'இயேசுவை கர்த்தரென்று பரிசுத்த ஆவியினாலன்றி ஒரு வரும் சொல்லக்கூடாது' ( 1 கொரி. 12:3 ) என்று குறிப்பிடுகின்றார். மேலும் யோவான் எழுதின சுவிசேஷத்தில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று கூறுகிறார் (யோ. 3:16). இங்கு 'பரிசுத்த ஆவி' என்றும், 'தேவன்' என்றும் வரும் வார்த்தைகள் பிதாவாகிய தேவனை குறிப்பிடுகின்றது. 'கிறிஸ்து' என்றும் 'ஒரே பேறான குமாரன்' என்று வரும் பதங்கள் குமாரனாகிய இயேசுவை குறிப்பிடுகின்றது. அதாவது, பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்தவை மட்டுமே வானோருக்கும், பூலோகத்தாருக்கும். பூமியின் கீழானோருக்கும் மற்றும் சகலவற்றிற்கும் தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்படுத்தி ( மத். 28:20 ) இவர் வழியாக மட்டுமே தம்மையே ஆவியானவராகவும் தம்முடைய குமாரனையே நித்திய ஜீவனாகவும் தர சித்தம் கொண்டார். இயேசுவே கர்த்தர், கடவுள், நமக்கு தெய்வம், இறைவன் என்று பிதாவாகிய தேவன் தாமே இயேசு கிறிஸ்துவை முத்திரித்திருக்கிறார் ( யோவான் 6:27 ). ஆகவே இயேசுவே கர்த்தர் என்றும் அவரே நமக்கு தேவன் என்றும் அறிந்து கொள்வது ( மத். 28:18 ) ( பிலிப். 2:10,11 ), ( யோ. 20:28 ), இதனையே 'நானே உன் தேவனாகிய கர்த்தர்' என்று தன் பிதாவின் சித்தப்படி தன்னை 'எகோவா' என்று மோசேயினிடத்தில் வெளிப்படுத்தினவராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முதலாம் கற்பனையாக இதனை கூறினார் (யாத். 20:2). ஆகவே இயேசு கிறிஸ்துவை மட்டுமே இறைவனாக, கர்த்தராக, தேவனாக வணங்குவதே பிதாவின் சித்தமாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது (மத். 22:44.45; மத் 28:9; மாற். 3:28: 1 கொரி. 1:2; ரோ. 9 : 5 ).

மேலும் யோவான் 1:1 மற்றும் 1:3 இல் இருந்து. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அநாதியானது என்றும் சர்வத்தையும் சிருஷ்டித்தவர் அவரே என்றும் அறிந்து கொள்வது. அதாவது பிதாவாகிய தேவன் எப்பொழுது இருந்து இருக்கின்றாரோ அப்பொழுது இருந்தே அவருடனே கூட குமாரனாகிய தேவனும் இருக்கிறார் என்றும், பிதாவாகிய தேவன் தாமே நேரடியாக சிருஷ்டிப்பில் ஈடுபடாமல் தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டே செய்தார் என்றும் அறிந்து கொள்வது. இதனையே இயேசு கிறிஸ்துவும் 'நானே அல்பாவும் ஒமேகாவும், ஆதியும், அந்தமும், இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய கர்த்தர்' என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் விளம்புகிறார் (வெளி. 21:6; 1:8). ஆதாம் எப்பொழுது இருந்து இருக்கிறானோ அவனோடே கூட ஏவாளும் இருந்தாள் (ஆதி. 1:27), இதே போலவே இயேசு கிறிஸ்துவும், பிதா எப்பொழுது இருந்து இருக்கின்றாரோ, அப்பொழுது இருந்தே இருக்கிறார் (யோ. 1:2).

ஆதியாகமம் 2:7ன்படி, 'தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவ ஆத்துமாவானான்', அதாவது 'மண்' என்பது அழிவை குறிக்கும், 'ஜீவ சுவாசம்' என்பது அழியாமையை குறிக்கின்றது. தேவன் தம்முடைய சாயலாகவே மனிதனை சர்வத்தையும் ஆளும்படி (ஆதி. 1:26) சிருஷ்டித்தாலும், அவன் கர்த்தருக்கு கட்டுப்பட்டவன் என்பதை காட்டிடவே 'அழியாமையும்', 'அழிவும்' சேர்ந்த ஒரு கலவையாகவே மனிதனை சிருஷ்படித்தார். ஏவாளையோ ஆதாமின் எலும்பினாலும் சதையினாலும் உண்டாக்கினார் (ஆதி. 2:21), ஆதாமும் ஏவாளும் ஒரே மாம்சம் என்பதை காட்டிடவே இப்படி செய்தார். கர்த்தர் ஏவாளை, ஆதாமை உருவாக்கினது போல் மண்ணிலிருந்து உண்டாக்கி இருக்க முடியும். ஆனாலும் அவர்கள் இருவரும் ஒரே மாம்சம் (அழிவும் அழியாமையும் சேர்ந்த ஒன்று) என்பதை காட்டிடவே அவர் ஆதாமிலிருந்து ஏவாளை உண்டாக்கினார். ஆகவே மனிதனுக்காகவே மனுஷி உண்டாக்கப்பட்டாள். (அதாவது) மனிதனுக்கு துணை ஆக மனுஷி உண்டாக்கப்பட்டாள் (ஆதி. 2:18). இதை நாம் ஊன்றி வாசிக்கும்பொழுது நமக்கு ஒரு உண்மைப்புலப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு இது நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ்