பிதாவாகிய தேவனைக் குறித்த விளக்கம்

தேவன் ஆவியாய் இருக்கிறார்என்று வேதாகமம் கூறுகிறது. இதற்கு பொருள் அவருடைய வல்லமை எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது என்றும், அவர் சர்வத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறார் என்பது தானே தவிர அவருக்கு ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லை என்று பொருளல்ல. எப்படியென்றால், தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோ. 4: 8), அதாவது God is love என்பதற்கு தேவன் அன்பு என்ற ஒரு குணத்தை அளவுக்கடங்காமல் உடையவராய் இருக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய, அன்பே கடவுள் அல்லது Love is God என்று சொல்வது தவறு. அன்பு தெய்வீகமானதே தவிர அன்பு கடவுள் அல்ல. அது போலவே God is Spirit'அல்லது தேவன் ஆவியாயிருக்கிறார் என்று சொல்வது அவருடைய வல்லமை எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

பிதாவாகிய தேவனுக்கு உருவம் உண்டு என்றே வேதம் மறைமுகமாக கூறுகிறது (ஆதி. 1:27) அவரை இயேசு கிறிஸ்து ஒருவரே பார்த்திருக்கிறார். மற்றொருவரும் அவரை கண்டதில்லை (யோ.6:46). அவருடைய பெயர் என்ன என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தாதி கர்த்தர். நம்முடைய ஆண்டவரும், தேவனும். இரட்சகருமாகி இயேசு கிறிஸ்துவுக்கே தகப்பன். இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே அவர் பிதா (யோ. 3:16), அவர் மகா பரிசுத்தர். ஒருவரும் சேரக்கூடாத வெளிச்சத்தில் வாசமாய் இருப்பவர். கோடானகோடி தேவ தூதர்களும், கேருபீன்களும், வல்லமைகளும், பரிசுத்தவான்களும் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஓயாமல் புகழ்ந்து வணங்கி பாடும் இடத்தில் இருப்பவர். சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர் (வெளி. 4 : 8). ஒரு மனிதனோ (அல்லது) மனுஷியோ (அல்லது) தேவ தூதர்களோ எவ்வளவு வல்லமை படைத்தவர்களா இருந்தாலும் நெருங்க முடியாத (அல்லது) நெருங்க கூடாத இடத்தில் இருப்பவர் (வெளி 5 :3,4). அதற்கு காரணம் : அவருடைய மகா பரிசுத்தமும், சர்வ வல்லமையுமாகும். இப்படி சர்வ வல்லமையும் மகா பரிசுத்தமும் உடையவராக இருந்தாலும், மற்றொரு புறத்தில் அவர் மகா அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், நீடிய பொறுமையுள்ளவர், தீயோர் மேலும் நல்லோர் மேலும் மழையை பொழிய பண்ணி, நீதியுள்ளோர் மேலும் அநீதியுள்ளோர் மேலும் தமது சூரியனை உதிக்க பண்ணுகிறவர் (மத். 5:45). நாம் கெட்டு போகாமல் இருப்பது பிதாவாகிய தேவனுடைய சுத்த கிருபை, கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானது அல்ல, தேவனுடைய சுத்த கிருபை (அல்லது) ஈவு (எபே. 2:8) என்று வேதாகமம் கூறுகிறது. இதற்காக, நாம் எப்பொழுதும் பிதாவாகிய தேவனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக தொழுது மகிமைபடுத்த வேண்டும். நம்மை பாவத்திலிருந்து மீட்டு விடவும் (மாற். 2:17). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தன்னுடைய அன்பை உலகுக்கு காட்டிடவும் தன் ஏக மைந்தன் என்றும் பாராமல் தனக்கு நிகரான பாவமில்லாத இயேசு கிறிஸ்துவை அவர் நமக்காக பாவமாக்கினார் (2 கொரி. 5: 21). இன்றும் நமக்காக இயேசு கிறிஸ்து கூறும் பரிந்துரைகளை அவர் கேட்டு அவற்றை நமக்காக செய்கிறார். (1 யோ.2:1) பிதாவாகிய இவருடைய சித்தத்தின்படி செய்கிறவனே அல்லாமல், இயேசு கிறிஸ்துவை நோக்கி வாயளவில் கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன் பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பதில்லை (மத்தேயு 7:21), இயேசு கிறிஸ்துவின் ஆவியை நம் உள்ளத்தில் ஏற்றுகொண்டு அவருடைய அன்பின் கட்டளைகளை கைக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுடைய சித்தமாயிருக்கிறது (யோ.14:21). அப்பொழுது மட்டுமே பிதாவாகிய தேவன் தம்முடைய ஆவியையும் நம் மேல் அனுப்பி நாம் ஆவியில் பூரண அபிஷேகம் பெற வழி செய்கிறார் (யோ. 14:26). இப்படிப்பட்ட ஆவியை நாம் பெறும்போது மட்டுமே நாம் இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியம் செய்து பிதாவை மகிமைப்படுத்த முடியும் (அப்போ. 2 : 4.41- 43).

தமிழ்