கிறித்துவர்களின் விசுவாசம் கிறிஸ்துவே

பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதி. 1:1 வசனம் கூறுகிறது தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்றும், தொடர்ந்து வரும் வசனங்கள் அவர் தன்னுடைய வார்த்தையினாலே எல்லா சிருஷ்டியையும் உண்டாக்கினார் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை நாம் யோவான் சுவிஷேசம் 1 ஆம் அதிகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது. அதாவது, ஆதியிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனோடு தேவனாக இருந்தார் என்றும் சகலமும் அவர் மூலமாய் (அல்லது) அவரால் மட்டுமே பிதாவாகிய தேவனின் சித்தத்தின்படி உண்டாக்கப்பட்டது என்றும் நமக்கு தெளிவாகின்றது.

இன்னும் இதை நேரடியாக கூறவேண்டுமானால் பிதாவாகிய தேவன் தாமே நேரடியாக செயல்படாமல் தன்னுடைய ஒரே பேரான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகவே (அல்லது) மூலமாகவே செயல்படுகிறார் என்றும், எனவே, ஆதியிலிருந்து இன்று வரை உண்டாக்கப்பட்ட சகலத்தையும் உண்டாக்கியவர் இயேசுவே என்றும், அதேபோல் இனிவரும் சகலத்தையும் உண்டாக்குகிறவரும், உண்டாக்க போகிற வரும் அவரே என்றும் விளங்குகிறது ( வெளி 21:5 ). இது நம்முடைய சித்தத்தினாலேயோ (அல்லது) பரலோகத்திலிருக்கிற தேவ தூதர்களுடைய விருப்பத்தினாலேயோ உண்டானது அல்ல. இது பிதாவாகிய தேவனுடைய சித்தத்தினால் உண்டானது ( மத். 28:18, மத். 11:27 ). ஆதலால் ஆதியிலே வானத்தையும் பூமியையும் மற்றும் சகலவற்றையும் உண்டாக்கியவராகிய இயேசுவே ( யோ. 1:10 ), ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி அவர்களோடு சஞ்சரித்தார். பின்பு அவரே ஏனோக்கோடும் நோவாவோடும் உறையாடினார். அவரே தன்னுடைய பிதாவின் சித்தத்தின்படி ஆபிரகாமை தெரிந்துக்கொண்டு அவன் சந்ததியின்( ஆதி. 12:1, மத். 1:1, ரோ. 4:3 ) வழியாக பிதாவாகிய தேவனுக்கும் மனிதருக்கும் இடையே தன்னை விசுவாசிப்பதின் வழியாக உறவை ஏற்படுத்தினார். இதனையே யோவான் தான் எழுதின சுவிசேஷத்தில், "தேவன் (பிதா) தம்முடைய ஒரே பேரான குமாரனை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை (கிறிஸ்து இயேசுவை) தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் (நம்மிடத்தில்) அன்பு கூர்ந்தார்" என்று எழுதுகிறார்( யோ. 3:16 ). எனவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, விசுவாசித்து தொழுது கொள்ளுவது மட்டுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக பிரியமான காரியமாய் இருக்கிறது( யோ. 6:29 ) என்று வேதாகமம் திட்டமும் தெளிவுமாய் கூறுகிறது. ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிய வேண்டிய வகையிலே அறிந்து, தொழுதுகொண்டு, அவர் வழியாய் மட்டுமே பிதாவாகிய தேவனை நாம் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்க வேண்டும் என்பதே மெய்யான விசுவாசமாய் இருக்கிறது.

இத்தகைய விசுவாசத்தை பெற்ற நாம் அதிலே நிலைத்து நிற்கும்படியும் அதிலே வளர வேண்டும் என்றும் பிதாவாகிய தேவன் விரும்புகின்றார்( மத். 24:13, யோ. 6:29 ). ஆகவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவை அறிய வேண்டியபடி அறிந்து கொள்வது, நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாதது. ஏனென்றால் இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார், அவரில்லாமல் நாம் ஒருவரும் பிதாவாகிய தேவனிடத்தில் சேர முடியாது( யோ. 14:6 ). அதாவது நாம் நம்முடைய இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், மறுமைக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்று கொள்ள முடியாது. மாறாக, பிதாவாகிய தேவனுடைய கோபம் நம் மேல் வரும்( யோ. 3:36 ). ஆகவே, எனக்கு அன்பார்ந்த தேவனுடைய பிள்ளைகளே, வழியும் சத்தியமும் ஜீவனுமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, விசுவாசித்து தொழுது கொள்வதே நித்திய ஜீவன். இயேசு கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன், இயேசு கிறிஸ்துவை அறிந்தவன் (அல்லது) உடையவன் இப்பூவுலகில் சகல ஆசீர்வாதத்தையும் முடிவிலே நித்திய ஜீவனையும் பெறுவது நிச்சயம் என்று பரிசுத்த வேதாகமம் உறுதிபடக் கூறுகிறது( யோ. 3:36 ).

                             'கிறிஸ்து இயேசுவை அறிய வேண்டிய பிரகாரமாய் அறிவது எப்படி?' என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழும்பும். 'இயேசு கிறிஸ்து என்பவர் யார்?' என்ற கேள்வி நம் உள்ளத்தில் வரும்பொழுது அதற்கு இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று மாம்ச பிரகாரமான பதில். மற்றொன்று ஆவிக்குரிய பதில்.

தமிழ்