பரிசுத்த ஆவியானவர் - ஒரு விளக்கம்

பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொண்ட நாம் பரிசுத்த ஆவியானவரை (அல்லது) தேற்றரவாளனை குறித்த விளக்கத்தையும் அறிவையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்புகின்றார்.

பரிசுத்த ஆவியானவர் யார்? அவர் எதற்காக நமக்கு அருளப்படுகிறார்? அவரை நாம் எப்படி பெற்று கொள்ள முடியும்? எப்பொழுது அவரை பெற்று கொள்கிறோம்? போன்ற கேள்விகள் நம் உள்ளத்தில் எழும்பும்.

 இன்று சிலர் பழைய ஏற்பாட்டின் காலம் பிதாவாகிய தேவனுடைய காலம் என்றும், புதிய ஏற்பாட்டின் காலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலம் என்றும், இன்று நாம் வாழும் காலம் பரிசுத்த ஆவியானவரின் காலம் என்றும் தவறாக பிரசங்கித்து வருகின்றனர். இது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது. இப்படி பிரசங்கிப்பது பிதாவாகிய தேவனுக்கு விரோதமான செயல், ஆகவே எனக்கு பிரியமான கிறிஸ்துவின் பிள்ளைகளே, நான் இதை எழுதுவதின் நோக்கம்! நீங்கள் பரிசுத்த ஆவியானவரை சரியாக அறிந்து, புரிந்து கொண்டு பிதாவாகிய தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதே.

பரிசுத்த வேதாகமத்தில், பரிசுத்த ஆவியானவர் இரண்டு வழிகளில் விவரிக்கப்பட்டுள்ளார்

  • கிறிஸ்துவின் ஆவி என்றும் (ரோ. 8:26,34; கலா. 4 : 6, ; 2 கொரி. 3:17; ரோ. 8 : 9)
  • பிதாவாகிய தேவனின் ஆவி (ரோ. 8 :14; ரோ. 8:9)

கிறிஸ்து இவ்வுலகில் தோன்றும் நேரத்தில் அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் அதாவது கன்னிமரியாளின் கர்ப்பத்தில் காணப்பட்டார் (அல்லது) உருவானார் என்று மத்தேயு, லூக்கா சுவிசேஷத்தின் வாயிலாக அறிந்து கொள்கிறோம். அதாவது கிறிஸ்து ஆவியின் வடிவிலும் இருப்பதால் அவர் ஒரு குழந்தையாக உருவெடுத்தார் (அல்லது) தன்னை சிறுத்து கொண்டு ஒரு சாதாரண பெண்ணும் தன்னை சுமக்கும்படி செய்தார். உலகத்தார் அனைவரும் தன்னை காணும்படியாக பிறந்தார். அதாவது காணக்கூடிய வகையிலே அவர் கருவாக மாறுவதற்கு காண முடியாத வகையிலே அவர் மேரியின் கருவறைக்குள் சென்றார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேரியின் கருவறையிலே யகோவா ஆகிய இயேசு கிறிஸ்து, ஆதியிலே தான் கொண்டிருந்த மேனியை அதாவது உண்மையான மனித உருவத்தை சிறுத்து கொண்டு பார்வைக்கு நம்மைப்போல உருவெடுத்தார். ஆகையினாலே அவர் இந்த உலகுக்கு வந்த பிறகுதான் அவருக்கு மனித உருவம் இருந்தது என்று சொன்னால் அது தவறு. ஆதியிலே அவர் மனித உருவம் கொண்ட மேனியை உடையவராக இருந்தார். அந்த மேனி ஆவியின் வடிவிலும் மகா பரிசுத்தமான மேனியின் வடிவிலும் இருந்தது. இதை நேரடியாக கூறினால் அவர் காணக் கூடியவராகவும், காண முடியாதவராகவும் இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே அவர் ஒரு சிலருக்கு காணப்பட்டார். ஆகவே பழைய ஏற்பாட்டின் மக்கள் அவரை அதரிசனமான கடவுள் என்று சொல்லி வழிப்பட்டனர். ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரை எல்லோரும் கண்டனர். கண்கண்ட கடவுளாக அவரை போற்றினர். ஆகவே இயேசு கிறிஸ்து நம்மைப்போல ஒரு மனிதக்கும், மனுஷிக்கும் பிறந்தவர் அல்ல. அன்னை மேரி அவரது கருவை சுமந்தவர்களாய் இருந்தார்களே தவிர அவருக்கு அவர்கள் உண்மையான தாய் அல்ல. நாம் காணக்கூடிய வகையிலே, உண்மையான மனித மேனியையும் ஆவியும் ஒன்றாக இணைந்தவராகிய அவர், இந்த உலகில் பிறந்தார். அன்னை மேரி ஒரு பரிசுத்தவாட்டி என்பதாலும், யோசேப்பு தாவீதின் வம்சத்தான் என்பதாலும் தான் இப்பூமிக்கு ஒரு சாதாரண மனிதனைப்போல வருவதற்கு அவர்களை பாத்திரமாக பயன்படுத்தினார். ஆகவே இயேசு கிறிஸ்து ஒரு உண்மையான மனிதனும், உண்மையான தெய்வமுமாய் இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது.

தமிழ்